தேனும் பாரியும் பாண்டியனும்


முன்குறிப்பு: இது 'தேன்' திரைப்படத்தின் விமர்சனம் அல்ல.


இயற்கைக்கென்று ஒரு ப்ரத்யேக போதை உண்டு என்பதை இயற்கையோடு சில நாட்கள் இயைந்து இருந்தாலே யாரும் உணரலாம். ஆனாலும் இந்த போதை என்பது நகரத்திலிருந்து விடுமுறைகளுக்கு ரிசார்ட்டுகளைத் தேடித் செல்பவர்கள் உணருவது. தொன்றுதொட்டுத் தலைமுறைகளாக மண்ணோடு மண்ணாய் வாழ்ந்து வருபவர்களுக்கு 'இயற்கை' என்று விளித்துச் சொல்லத் தனியே ஏதுமில்லை. அப்படி வாழ்பவர்களுக்கு - மண்ணோ, மலையோ, கடலோ, காடோ - எல்லாம் அவர்களின் வாழ்வு. மூச்சோடும் இதயத் துடிப்போடும் கலந்த அந்த அடிநாதத்திலிருந்து அவர்களைப் பிரித்தெடுப்பது எல்லா காலத்திலும் மாபெரும் போராட்டமாகவே இருந்திருக்கிறது.

வளங்களைச் சுரண்ட, வர்த்தகமயமாக்க, கழிவுகளைக் கொட்ட, உயிர்களை வேட்டையாட, பணம் கொழிக்கும் பயிரிட, மொத்தமாய் வாரிச் சுருட்ட என்று மண்ணுக்கும் மலைக்கும் காட்டிற்கும் கடலிற்கும் தொடர்பே இல்லாத ஒரு கூட்டம் வரும் போது பூர்வக்குடிகளை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து பிரித்தெடுப்பது தான் முதல் நோக்கமாகிவிடுகிறது.

ஆனால் இந்த நோக்கங்கள் எதுவும் இல்லாத (என்று வைத்துக்கொள்வோம் இந்த விவாதத்திற்காக) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு, அடிப்படை வசதிகள் எட்டாத, எட்டமுடியாத ஒரு மலையின் உச்சியில் வாழும் குடிகளை, 'மலையிலிருந்து கீழிறங்கி வாருங்கள். உங்கள் பிள்ளைகள் படித்துக் கை நிறைய பணம் சம்பாதிக்க உண்டுஉறைவிடப் பள்ளிகளும் இன்னும் மற்ற வசதிகளும் செய்துதந்திருக்கிறது அரசு', என்று கூறும் போது அதிலிருக்கும் நியாயத்தை மறுக்க முடியாது என்று தான் தோன்றும் 'தேன்' திரைப்படத்தைப் பார்க்கும் எவருக்கும்.

பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை சீருடைகளுக்குள் திணித்து, கையிலும் தோளிலுமாக சுமந்து, காட்டையும் ஓடையையும் தாண்டிக் கொண்டு பள்ளியில் விட்டாலும், மலையிலும் மரத்திலும் மடுவிலும் கட்டின்றி சுற்றித் திரிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையானக் கல்வியைப் பயிலும் குழந்தைகளை, கைகால் ஒடுக்கி ஓரிடத்தில் நாள் முழுதும் அமரவைத்து அவர்களின் வாழ்வியலுக்கு அந்நியப்பட்ட விஷயங்களை அவர்கள் மீது திணிக்கும் போது அது அவர்களின் தேன் குடித்த வாயில் வேப்பங்காயாய் கசப்பதில் இருக்கும் நியாயத்தையும் மறுபடியும் மறுக்க முடியாமல் தான் போய்விடுகிறது.

இங்கே எழுகிறது மிகப்பெரியக் கேள்வி ஒன்று. இரு பக்க நியாயத்தையும் மறுக்க முடியவில்லையெனின் எப்பக்கத்தைத் தெரிவு செய்வது? அரசோ, அரசியலோ, கொள்கையோ, கோட்பாடோ பற்றி விவாதிப்பது அல்ல முன் வைக்கும் கேள்வியின் நோக்கம். It is an ethical dilemma.

இரண்டு பக்கங்களில் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதான கேள்வி. ஒரு அரசு தன் மக்களுக்கு,  அவர்களுக்குத் தேவை என்றும், அவர்களின் நலன் சார்ந்ததென்றும் தான் நம்புவதை, அவர்கள் வேண்டாமென்றாலும், அவர்கள் மீது வலிந்துத் திணிப்பது ஒரு பக்கம் என்று வைத்துக்கொள்வோம். 'நீங்கள் சொல்லும் நலன்கள் எங்களுக்குத் தேவையில்லை, அவைகள் எங்கள் நலன்களே அல்ல, நாங்கள் இருக்கும் இடமும் நாங்கள் வாழும் வாழ்க்கை முறையும் எங்கள் மலையும் காடும் எங்களுக்குப் போதும்', என்று கூறும் மக்கள் இன்னொருபுறம் என்று வைத்துக்கொள்வோம்.

இவை இரண்டும் இரண்டு பக்கங்கள் மட்டுமாய் இருந்துவிட்டால் கூட புறந்தள்ளிவிட்டுக் கடந்து சென்றுவிடலாம். ஆனால் இவை இரண்டும் இரண்டு சித்தாந்தங்கள். முன்னது ஏட்டுக்கல்வியையும் தொழிற்சாலைத் தொழில்முறையையும், அது சார்ந்த வருவாயையும் எல்லாவற்றிற்கும் தீர்வாக முன்னிறுத்தும் சித்தாந்தம். பின்னது பூமியும், காற்றும், நீரும், நெருப்பும், வானும், மழையும் தரும் வளங்களும் அறிவும் போதும் காயப்படுத்தாத வாழ்வு வாழ எனும் சித்தாந்தம். 

பின்னது தான் சரியென்று அதன் பக்கம் வாதிக்க நேரிட்டால் ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழில்முறைக் கலாசாரத்தின் rat race-ல் ஓடக்கற்றுக்கொடுக்கும் ஏட்டுக்கல்வித் தேவையில்லை என்றோ முக்கியமில்லை என்றோ ஒதுக்கித் தள்ள நினைப்பதில் சிக்கல் ஒன்று உண்டு. இந்த ஏட்டுக்கல்வி என்பது கல்விக்கூடங்களில் நாள் முழுதும் வருடக்கணக்காக அடைபட்டுக் கிடந்து முடிவில் கையில் வாங்கும் காகிதச் சுருள் மட்டுமல்ல. அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் உலகுடனும் அசுரவேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வியலுடனும் தொடர்புகொள்ளவும், அதன் ஊடாக முடிந்தவரை இடித்துக்கொள்ளாமல் பயணிக்கவும் உதவுவது ஏட்டுக்கல்வியும் அது சார்ந்த வாழ்வும் கற்றுக்கொடுக்கும் திறன். புறவுலகின் தேவையின்றி மலையுச்சியில் வாழும் வரை இந்தத் திறன் தேவையில்லாமலேதான் இருக்கிறது தேனின் வேலுவுக்கும்.

சரி, அப்படியெனில் முன்னது தானே சரியானதாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் அதிலும் சிக்கல் ஒன்று உண்டு. இருக்கும் வளங்கள் எல்லாம் வழித்து எடுப்பதற்கே என்பதாக அனைத்தையும் வாரிச் சுருட்டி வாயில் போட்டு மாசுக்களாகவும் நச்சுக்களாகவும் எச்சங்களை உமிழும் இந்த சித்தாந்தத்தின் பக்கம் சாய்ந்தோமானால், அடுத்தத் தலைமுறைகளுக்குக் காண்பிக்க மண்ணும் மலையும் மரமும் மடுவும் மானும் மீனும் என்று எதுவும் இல்லாமல் போவது மட்டுமல்ல, வரும் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல கட்டாந்தரையும் காய்ந்த கிணறும் தான் மிச்சமாக இருக்கும்.

கொழுக்குமலைக் குடிகளும் குறிஞ்சிக்குடி மக்களும் போல உலகெங்கும் இருக்கும் பூர்வக்குடிகளே இவைகளைக் காக்கும் பாதுகாப்பு வட்டத்தின் கடைசி அடுக்காக இருக்கிறார்கள்.

'அதெல்லாம் சரி ஐயா, பாரியும் பாண்டியனும் இதற்குள் எங்கே வந்தார்கள்', என்று கேட்கிறீர்களா? இங்கே தான்.

மலையின் அங்கமாக வாழ்ந்த மக்களுக்கு சான்றாக வேள்பாரியையும் அவன் மக்களையும் விட யார் இருக்கமுடியும்? மரத்தையும் செடியையும் கொடியையும் பறவையையும் விலங்கையும் குடும்பமாகவும் தெய்வமாகவும் வாழ்வாகவும் வாழ்ந்தவர்கள் பாரியும் அவன் மக்களும். இயற்கையின் நியதியும் தர்மமும் குருதியில் ஓட வாழ்ந்த அவன், அறியாமல் போனது புறவுலகின் தாட்சண்யமற்ற நிதர்சனமும் 'வெற்றி' என்பதர்க்கான ஒன்றிற்கு மன்னர்களும் கூடக் கொடுக்கத் தயாராயிருந்த விலைகளும். சரித்திரம் தெரிந்தவர் அறிவர் வேள்பாரி வீழ்ந்த விதம்.

கடல் வழி வாணிபமும் போக்குவரத்தும் பாண்டியனுக்குப் பெரும் லாபம் மட்டுமல்ல, அயல்நாடுகளில் பாண்டிய அரசின் வலிமையையும் பெருமையையும் செல்வத்தையும் உணர்த்துவது. மீன் கொடியை துணைக்கண்டத்தின் எல்லைக்கப்பால் கொண்டுசேர்க்கும் வாகனம். கடல் வழி வாணிபத்தின் வாயிலாய் வளர்க்கும் நல்லுறவு பாண்டியனுக்கு செல்வத்தை மட்டுமல்ல, தேவைப்படும் போது அயல் நாட்டு நட்பு தேசங்களின் படைகளையும் வேண்டி வரவழைக்கச்செய்யும் கருவி. இப்படிப்பட்ட கடல் வாணிபத்திற்கும் போக்குவரத்திற்கும் கடலிலேத் திசை காட்டும் கருவியாய்க் கிடைக்கிறது வேள்பாரியால் தெய்வமாக வணங்கப்படும் தெய்வவாக்கு (தேவாங்கு) விலங்கு.

‘The bloodiest wars are fought not between a right and a wrong, but between a right and a right’, என்று எங்கோ எதிலோ வாசித்த ஞாபகம். குடி காக்க, மலை காக்க, தன் மக்களின் வாழ்வு முறை காக்க போர்க்கோலம் பூண்டான் பாரி. நாடு காக்க, நாட்டின் பெருமை காக்க, மீன் கொடி பறக்க போர் முரசு கொட்டினான் பாண்டியன். மலையின் படி பாரி சரியென்றால், நாட்டின் படி பாண்டியனும் சரியே. இந்த இரண்டு சரிகளையும் இன்றும் நாம் நூற்றாண்டுகள் கடந்தும் கொண்டாடுகிறோம் - பாரியைப் புத்தகமாக இதயத்தில் இறுக்கி, பாண்டியர் நட்டுச் சென்ற கலாசாரத்தை அகழ்வாய்ந்து மார்தட்டி இறுமாந்து.

கிழிக்கப்பட்டுள்ள கோட்டின் எதிரெதிர் பக்கங்களில் அன்று பாரியும் பாண்டியனும், இன்று வேலுவும் அரசாங்கமும். நாம் எட்டெடுத்து வைக்கப்போகும் பக்கத்தைப் பொறுத்து தான் நம் வாழ்க்கை முறையும், நம் வாழ்வியல் சித்தாந்தங்களும், இவற்றை வைத்து நாம் எடுக்கும் வருங்கால உலகை நிர்ணயிக்கும் சிறு முடிவுகளும், அந்த முடிவுகளின் அடிப்படையில் நாம் ஆற்றும் சின்னஞ்சிறு செயல்களும்.

பாரியும் சரி, பாண்டியனும் சரி என்றால் எந்த சரியைத் தேர்ந்தெடுப்பது நாம்? எதுவும் வேண்டாம் என்று இரண்டையும் ஒதுக்கிவிட்டு உயிருடன் உலவமுடியாது உலகில் நாம். புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கூட ஆதார் அட்டை தேவைப்படும் காலம் இது. பாரியும் சரி பாண்டியனும் சரி, இரண்டு சரிகளுமே வேண்டும் என்று முடிவெடுத்தால் பாரியும் பாண்டியனும் கொடுத்த விலைகள் இரண்டையுமேக் கொடுக்க நாம் தயாராயிருந்தாலன்றி இரண்டு குதிரைகளிலும் ஒருசேர சவாரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து எந்த முடிவு எடுத்தாலும் கூட , எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனும் பட்சத்தில் எந்த முடிவை எடுப்பது நாம்?

And therein lies our dilemma.


பின்குறிப்பு: வேள்பாரி புத்தகத்தின் இரண்டாம் பகுதியை வாசிக்காமல் முதல் பகுதியையே தாகம் தீராமல் மறுபடி மறுபடி வாசித்துக்கொண்டிருப்பதால் பாரியைப் பற்றியும் பாண்டியனைப் பற்றியும் உள்ள புரிதல்களில் பிழை இருக்கலாம். இருந்தால் மன்னியுங்கள்.


Write a comment ...